அப்பா அதிமுக, மகன் தவெக; ஓடோடி வந்த முன்னாள் முக்கிய நிர்வாகி… மகனுக்கு அமைச்சரவை!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்துடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, இன்று தனது முதல் அமைச்சரவை விரிவாக்கத்தை செய்துள்ளது. மொத்தம் 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்று உள்ளனர். இதில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இளம் தலைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் சில பெயர்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மத்திய அமைச்சர் எல். முருகனை அவிநாசி தொகுதியில் தோற்கடித்த எஸ். கமலிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது
இந்த புதிய அமைச்சரவை பட்டியலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு முக்கிய பெயர், ராசிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்செல்வன்
42 வயதாகும் லோகேஷ் தமிழ்செல்வன், தமிழக அரசியலில் மிகவும் பரிச்சயமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்
அதிமுகவின் மூத்த தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான தனபாலின் மகன் தான் இந்த லோகேஷ் தமிழ்செல்வன். நீண்ட காலம் அதிமுகவில் இருந்த இவர், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
அதன்பின், தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாத போது அதிமுக தலைமை தங்களைச் சரியாகக் கவனிக்கவில்லை என்றும், மூத்த தலைவர்களுக்கு அங்கு மரியாதை இல்லை என்றும் கூறி, கடந்த பிப்ரவரி மாதம் (2026) தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு வந்து தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த நிலையில் போட்டியிட்ட தொகுதியிலும் வென்று இன்று அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார்.
குறிப்பாக, பெண்களுக்கு இந்த அமைச்சரவை பட்டியலில் கணிசமான இடம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் தென் மாவட்டங்கள், மேற்கு மண்டலம், டெல்டா பகுதிகள், சென்னை மாநகர் பகுதிகள் என அனைத்து பகுதிகளிலிருந்தும் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
இந்த அமைச்சரவை பட்டியலில் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக - அதிமுக ஆட்சி காலங்களில் ஒரு சில மாவட்டங்களில் எந்த எம்எல்ஏவும் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள்.
ஆனால், இந்த தேர்தலில் ஒரு சில மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறவில்லை என்றாலும் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இருக்கும் மாவட்டங்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, காஞ்சிபுரம் போன்ற சிறிய மாவட்டங்களுக்கு இரண்டு அமைச்சர்கள் வழங்கப்பட்டு இருப்பதும், திண்டுக்கல் போன்ற பெரிய மாவட்டங்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட வழங்கப்படாதது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
