ஆம் ஆத்மிக்கு எதிராக.. பாஜக போட்டி போராட்டம்! கெஜ்ரிவால் பதவி விலக வலியுறுத்தல்! டெல்லியில் சலசலப்பு

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று பாஜக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது. ஆனால் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இறுதியாக 8வது முறை சம்மன் அனுப்பப்பட்டபோது, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது என்று கேட்டிருந்தார். ஆனால் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

இதனையடுத்து, அன்றிரவே அதிரடி ரெய்டு நடத்தி கெஜ்ரிவாலை அமலாகத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகளில் டெல்லி அமைச்சர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர். தேசிய அளவில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும் சமீபத்தில்தான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசு, எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்க விசாரணை அமைப்புகளை ஏவி விடுவதாக குற்றம்சாட்டிய ஆம் ஆத்மி, கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று நடத்தினர். இதனால் மொத்த டெல்லியும் உஷார்படுத்தப்பட்டது. ஏராளமான அளவில் போலீசாரும், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டனர். லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டது.

#arvind-kejriwal#bjp#delhi#enforcement-directorate#politics#அமலாக்கத்துறை#அரவிந்த்-கெஜ்ரிவால்#டெல்லி#பாஜக#மதுபான-கொள்கை